சென்னையில் மணிப்பூர் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: உணவு டெலிவரி ஊழியர் கைது
சென்னை சூளைமேட்டில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் சூளைமேட்டில் தங்கி, தனியார் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்த நிலையில், அவர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென விழித்தெழுந்த இளம்பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த போலீஸார், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை அடையாளம் கண்டனர்.
விசாரணையில், சைதாப்பேட்டை கார்னி கார்டன் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த நேதாஜி (33) என்பவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உணவு விநியோகத்திற்காக அந்த பகுதிக்கு சென்றபோது திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நேதாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.



