ஜார்க்கண்டில் 3 முக்கிய மாவோயிஸ்டுகள் கைது: ஏ.கே-47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி பறிமுதல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், 3 முக்கிய மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டின் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்திற்கு உட்பட்ட காண்ட்ரா மற்றும் கண்டேர்பேரா பகுதிகளில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது. கைது செய்யப்பட்ட மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு மொத்தம் ரூ.22 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே காவல்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கோப்ரா எனப்படும் சிறப்பு கமாண்டோ படை, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) மற்றும் ஜார்க்கண்ட் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
உதய்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றிவளைத்து நடத்திய சோதனையில், அங்கு பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்களின் தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



