பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா பாஜக நிர்வாகி டி. சாய்கிரண் கவுட் மற்றும் தொழிலதிபர் எஸ். அரவிந்த் ரெட்டி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரதமரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், சமூகத்தில் குழப்பம் மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் தொடர்புடைய சமூக வலைதள கணக்குகள் மீது சைபர் கிரைம் போலீஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற பேரணியின் போது பிரதமருக்கு எதிராக பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் கருத்துகளை நீக்குமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு டெல்லி போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.



