அங்கித் சர்மா கொலை வழக்கு: ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
டெல்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தின் போது உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
2020 பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட கலவரங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின் போது, உளவுத் துறை (ஐபி) அதிகாரியாக பணியாற்றிய அங்கித் சர்மா, வீட்டில் இருந்து பொருட்கள் வாங்கச் சென்றபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர், அங்கித் சர்மாவின் உடல் அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளிட்ட 11 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் 2024 மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், தாஹிர் உசேன் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிபதி பிரவீன் சிங் கடந்த 13-ஆம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதில், டெல்லி காவல்துறை தரப்பில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலை என்றும், குற்றத்தின் தன்மை மிகவும் தீவிரமானது என்றும் போலீஸ் தரப்பு வாதிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் மதுகர் பாண்டே தனது இறுதி வாதத்தில், அங்கித் சர்மா மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவரது உடலில் 51 காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். அதில் 7 காயங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும், அவரது கழுத்தில் துணியை கட்டி இழுத்துச் சென்று சாக்கடை கால்வாயில் வீசியதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
எனினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனைக்கு பதிலாக 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, டெல்லி கலவர வழக்குகளில் முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. அங்கித் சர்மா கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.



