குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம் – ஏடிஆர் அறிக்கை
நாட்டிலேயே குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2-ம் இடத்திலும் உள்ளனர்.
மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த ஆய்வின்படி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் மதிப்பிலான சொத்துகளுடன் நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்துடைய முதல்வராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ரூ.85.87 லட்சம் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ரூ.1.03 கோடி சொத்துகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
இதற்கு நேர்மாறாக அதிக சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆய்வு செய்யப்பட்ட 31 முதல்வர்களில் 4 பேர் அதாவது 13 சதவீதம் பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள 31 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



