18 மாத குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு: வெறும் 21 நாட்களில் விசாரணை முடிந்து ஆயுள் தண்டனை
உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் 18 மாத பெண் குழந்தைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து வெறும் 21 நாட்களுக்குள் வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மார்ச் மாதம், குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த தாயின் உறவினரான 30 வயது நபர், குழந்தைக்கு பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அதே நாளில் என்கவுன்டருக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக சேகரித்தனர். சாட்சிகளிடம் விரைவாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், தேவையான அனைத்து விசாரணைகளும் குறுகிய காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டன. பின்னர் குற்றப்பத்திரிகையும் தாமதமின்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜூலை 3-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூலை 24-ஆம் தேதி போக்சோ சிறப்பு நீதிபதி மனோஜ் குமார் சித்து தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அபராதமாக வசூலிக்கப்படும் ரூ.2 லட்சம் தொகையை முழுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் விரைவான விசாரணை மற்றும் துரிதமான நீதி வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, சட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.



