திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை கொல்ல சதித்திட்டம்; கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் கைது
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், திருநின்றவூர் நகராட்சி பெண் கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 பட்டாக் கத்திகள் மற்றும் மிளகாய்ப் பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, திருநின்றவூரைச் சேர்ந்த ஜோசப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கும், 26-வது வார்டு கவுன்சிலரான கோமதிக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறின் பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோமதியை அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதற்கிடையில், வேறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி வந்த ஜோசப்பை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ய ஸ்டீபன் ராஜ் திட்டமிட்டதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் ஜோசப்பை தாக்குவதற்காக ஆட்டோவில் ஆயுதங்களுடன் 6 பேர் காத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோசப் நீதிமன்றத்திலிருந்து வெளியே வர தாமதமானதால், அந்தக் குழுவினர் திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூர் பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் சுற்றிவளைத்ததில், அசோக்குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 பட்டாக் கத்திகள் மற்றும் மிளகாய்ப் பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தப்பியோடிய ஸ்டீபன் ராஜ், தவசி, சுமன் மற்றும் ஜான்சன் என்கிற அந்தோணி ராஜ் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை முயற்சிக்கான திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது, இதில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



