மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: ஐடி ஊழியர் கைது, மேலும் 2 பெண்கள் பாதிப்பு
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐடி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸார் தெரிவித்த தகவலின்படி, சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், கடந்த 2024-ஆம் ஆண்டு பட்டாபிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரிந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (26), நிறுவனத்தின் விருந்து நிகழ்ச்சியின்போது பெண்ணுக்குத் தெரியாமல் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மயக்க நிலையில் இருந்த அவரை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது வேலையை ராஜினாமா செய்து, செல்போன் எண்ணையும் மாற்றி கணவருடன் வசித்து வந்துள்ளார். எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புதிய செல்போன் எண்ணை கண்டறிந்த கோகுல்நாத், மீண்டும் தொடர்புகொண்டு ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கோகுல்நாத்தை கைது செய்த போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அதே ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய மேலும் இரண்டு பெண்களிடமும் இதேபோன்ற முறையில் மிரட்டல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



