சென்னையில் ரூ.4 கோடி டெண்டர் மோசடி: ரூ.13 லட்சம் ஏமாற்றிய தெலங்கானா இளைஞர் கைது
ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயந்திபாபு (35). இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பிரபல நிறுவனத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான தானியங்கி கதவுகள் தொடர்பான டெண்டர் வர உள்ளதாகவும், அதனை பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறி பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்திபாபு, கடந்த மார்ச் 11-ம் தேதி சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகிலிகிட்டா மகேஷ் (33) என்பவருடையது என தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தெலங்கானா சென்று, மொய்னாபாத் போலீஸார் உதவியுடன் மெடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மோகிலிகிட்டா மகேஷை கடந்த 27-ம் தேதி கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட மகேஷ் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்ததும், மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபருக்கு தனது வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்ததும் தெரியவந்தது. ஜெயந்திபாபுவிடமிருந்து பெறப்பட்ட ரூ.12.70 லட்சத்தை பிரதான மோசடி கும்பலிடம் ஒப்படைத்ததற்காக அவர் ரூ.2.75 லட்சம் கமிஷனாக பெற்றதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.



