மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது; 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு
தென்காசி மாவட்டத்தில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் தாளாளர் பினு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு கல்வி பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு, கல்லூரி தாளாளர் பினு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி கல்வி பயின்ற அந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதை அறிந்த தாளாளர், அதனை காரணமாகக் கொண்டு மாணவியை மிரட்டி பல்வேறு வகைகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவி கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த மாணவி, நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விரிவான புகார் மனு அனுப்பினர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பினு மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பினு, காவல் நிலையத்தில் இருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



