கரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்; கத்தியால் குத்தியதில் தாய் பலி, மகள் படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாய் மற்றும் மகள் மீது மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே உள்ள எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமியின் மனைவி பாப்பம்மாள் (65), அவரது மகள் மஞ்சுளா (42) ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் மஞ்சுளா காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நங்கவரம் போலீஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த பாப்பம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டதுடன், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையில், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட பாப்பம்மாளின் பேத்தி சம்பவம் நடந்த இரவு அவரது வீட்டிற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அவரை தேடி கோவை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



