திருமணமாகாமல் குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சம்; பச்சிளம் குழந்தையை கொன்றதாக இளம்பெண் வாக்குமூலம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் குப்பைத்தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண், திருமணமாகாமல் குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகேயுள்ள குப்பைத்தொட்டியில், சாக்குப் பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அருகிலுள்ள வீட்டில் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்த பிரியங்கா (22) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞருடன் காதல் உறவில் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் கர்ப்பமானதை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மாதம் 27-ஆம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் வேலை பார்த்து வந்த வீட்டின் கழிப்பறையிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். குழந்தை அழுததால் அது வெளியில் கேட்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், குழந்தையின் வாய் மற்றும் மூக்கை கையால் அழுத்தியதாகவும், இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சில நண்பர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்ட பின்னர், குழந்தையின் உடலை பிளாஸ்டிக் அரிசி மூட்டையில் வைத்து அதிகாலையில் அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசியதாகவும், திருமணமாகாமல் குழந்தை பெற்றது வெளியில் தெரிந்துவிடும் என்ற பயமே இந்தச் செயலுக்குக் காரணம் எனவும் பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரியங்காவை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



