மேற்கு வங்கத்தில் முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை; ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
மேற்கு வங்க மாநிலத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், சுமார் ரூ.20 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம் டியூச்சா கிராமத்தைச் சேர்ந்த மினார் மொண்டல், அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர். பின்னர் அந்தப் பணியை விட்டு விலகிய அவர், தனது உறவினர் துளு மொண்டலுடன் இணைந்து கல் குவாரி தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் அதிகளவில் சொத்து சேர்த்ததாக எழுந்த தகவலின் அடிப்படையில், போலீஸார் அவரை நீண்டகாலமாக கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து, மினார் மொண்டலின் வீட்டில் நேற்று போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகள் மற்றும் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணிக்காக ஐந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் துல்லியமான மதிப்பு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், சுமார் ரூ.20 கோடி ரொக்கமும், 15 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் சம்பந்தப்பட்ட வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் துளு மொண்டல் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிர்பும் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரி தொழில் மற்றும் அமைப்புசார் குற்றச்செயல்கள் நடைபெறுவதாக நீண்டகாலமாக புகார்கள் எழுந்திருந்தன. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அனுமதியின்றி நடைபெறும் சுரங்கத் தொழில்கள் மற்றும் அதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் மாநிலத்தில் ஒரே சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்ட சம்பவமாக இது கருதப்படுகிறது.



