எம்.ஜி.ஆர். பாணியில் முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’: திரை உலகில் மெகா வெற்றிபெறுமா?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தீவிர அரசியல் வருகைக்குப் பிந்தைய கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிந்து விஜய்யும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் தொடக்கத்தில் ‘முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என டைட்டில் கார்டு திரையிடப்படுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் நடித்த ‘மீனவ நண்பன்’ (1977) மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ (1978) ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. அன்றைய ஆளுநரிடம் சிறப்பு அனுமதி பெற்று எம்.ஜி.ஆர். தனது திரைப்படப் பணிகளைச் செய்து கொடுத்த நிலையில், அந்த இரு திரைப்படங்களும் 100 நாட்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
தற்போது அதே போன்றதொரு வரலாற்றுப் பின்புலத்தில், முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. சென்சார் சான்றிதழ் தாமதத்தால் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாக முடியாமல் போன இத்திரைப்படம், தற்போது பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவது சவாலானது என்றாலும், தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகி உள்ளதால், வசூல் ரீதியாகவும் மக்கள் ஆதரவு ரீதியாகவும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் எனத் திரை உலகினர் எதிர்ப்பார்க்கின்றனர்.



