சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு சிம் கார்டு; பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் ரூ.1 கட்டணத்தில் சிம் கார்டு வழங்கும் சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் லோகநாதன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிஎஸ்என்எல் சேவைகள் மற்றும் புதிய சலுகைகள் குறித்து விளக்கினார்.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை ‘ஃப்ரீடம் 2.0’ திட்டத்தின் கீழ் ரூ.1 கட்டணத்தில் சிம் கார்டு வழங்கும் சிறப்பு சலுகை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ரூ.1,111 கட்டணத்தில் எஃப்டிடிஎச் திட்டம், சேட்டிலைட் போன் சேவை உள்ளிட்ட பல்வேறு புதிய சேவைகள் மற்றும் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்களில் சிம் கார்டு மற்றும் சலுகை விலையில் எஃப்டிடிஎச் திட்டம் வழங்கப்படுகிறது. தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை 1,014 கோபுரங்களில் செயல்பட்டு வருவதால், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுகளை இலவசமாக 4ஜி சிம் கார்டுகளாக மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஸ்கைப்ரோ நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்பு வாயிலாக ஐபிடிவி சேவையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.122 முதல் தொடங்கும் கட்டணத் திட்டங்களில் 400 இலவச தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும். வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில் ‘சாட்பாட்’ சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக லோகநாதன் கூறினார்.
பிஎஸ்என்எல் சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1800 4444 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், ரூ.199 முதல் தினசரி டேட்டா வசதியுடன் கூடிய பல்வேறு மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களும் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது துணை பொது மேலாளர்கள் அனூப், அனிதா, துரைசாமி மற்றும் தலைமை கணக்கு அதிகாரி வாவேர்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



