தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: சென்னையில் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று (ஆக.14) சென்னையில் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கும், பவுனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் உலக பங்குச் சந்தையின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று (வியாழக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையானது. அதற்கு முந்தைய 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மட்டும் தங்கம் விலை ரூ.2,160 வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை விவரம்
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.196 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,317-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை ஆகிறது.



