விருதுநகரில் விதிமீறலால் தடை செய்யப்பட்ட 80 பட்டாசு ஆலைகளில் 23 ஆலைகளுக்கு மீண்டும் அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட 80 பட்டாசு ஆலைகளில், குறைபாடுகளை சரிசெய்த 23 ஆலைகள் மீண்டும் செயல்பட மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,130 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 600-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இதுதவிர, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று செயல்படும் பட்டாசு ஆலைகளும் உள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் அதிகபட்சமாக 5 அறைகளில் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இந்த வகை ஆலைகளில் பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்க அனுமதி இல்லை. அதேபோல், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்ற ஆலைகளில் 15 அறைகளுக்குள் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை அலுவலகத்தின் அனுமதியுடன் செயல்படும் ஆலைகளில் மத்தாப்புகள், சோல்சா வெடிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க முடியும். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்ற ஆலைகளில் 15-க்கும் மேற்பட்ட அறைகளுடன் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வகை உரிமம் பெற்ற ஆலைகளில் மட்டுமே பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்க அனுமதி உள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின்போது நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வந்த 80 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்த 80 ஆலைகளின் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆலைகளில் விதிமுறை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தேவையான குறைபாடுகளை சரிசெய்த 23 பட்டாசு ஆலைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, அவற்றை மீண்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள ஆலைகள் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிய பின்னரே மீண்டும் செயல்பட அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



