இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்; 48 சதவீதமாக உயர்வு
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்தியா மொத்தம் 18.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 8.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 48 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையே, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில் அமெரிக்க செனட் சபையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிகாரம் வழங்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி வளங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகளை இலக்காகக் கொண்டு அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் இலக்கில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கும், ரஷ்யாவுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வழங்கும் வகையிலும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து அதிகரித்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாகவும், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா 100 சதவீதம் வரை வரி விதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் மேற்காசிய போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சவால்கள் அதிகரித்து வருகின்றன. இந்த இரு முக்கியமான சூழ்நிலைகளையும் இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதும், எதிர்காலத்தில் அதன் கச்சா எண்ணெய் இறக்குமதி கொள்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் வரும் நாட்களில் தெரியவரும்.



