Kimi K3 சாட்பாட்டின் கட்டண சந்தாவை நிறுத்திய Moonshot AI: பின்னணி என்ன? சந்தை நிலவரம்
சீனாவின் மூன்ஷாட் ஏஐ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ‘கிமி கே3’ சாட்பாட்டிற்கு உலகளவில் பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பும், அதிக அளவிலான டிமாண்டும் கிடைத்ததால், இதன் கட்டண சந்தாவை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் மாடல்களுக்கு இணையான திறன் கொண்ட இந்த ஏஐ, ஏஐ லீடர்போர்டில் 3-வது இடத்தைப் பிடித்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதன் கோடிங் திறன் மிகச் சிறந்த பெஞ்ச்மார்க்காகப் பார்க்கப்படுகிறது.
மென்பொருள் உருவாக்கம், நிதித் தரவு ஆய்வு மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற பல்வேறு கடினமான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் ஆற்றல் கொண்ட உலகின் முதல் ‘ஓபன்-வெயிட்’ திறந்தநிலை ஏஐ மாடலாக ‘கிமி கே3’ விளங்குகிறது.
அறிமுகமான 48 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட அதிகப்படியான டிமாண்ட் காரணமாக, ஏற்கனவே உள்ள பயனர்களின் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதால் கட்டண சந்தா நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது 2 பிரிவுகளாக மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



