சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!
சேலம்:
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சேலத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட வேண்டிய 9 அரசுப் பேருந்துகள் பழுதடைந்து உதிரிப் பாகங்கள் இல்லாத காரணத்தால் அஸ்தம்பட்டி பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சிச் சம்பவத்தால், அந்தப் பேருந்துகளை இயக்க வேண்டிய 18 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிமனையிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெங்களூரு செல்லவிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து கிளை மேலாளர் செல்வகுமாரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, பேருந்துகள் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என அவர் அலட்சியமாகப் பதிலளித்தது பொதுமக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியப் பயண நாளுக்கு முன்னதாக, முறையான பராமரிப்பு இன்றி பேருந்துகள் முடக்கப்பட்ட விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




