மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி
சென்னை:
மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் மட்டும் சாத்தியமாகாதது ஏன் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய எடுக்கப்பட்ட முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாராட்டியுள்ளார். விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால்தான் மகாராஷ்டிர அரசு அனைத்து விதிகளையும் பின்பற்றி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசு 36 ஆயிரத்து 585 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு வெறும் 2 ஆயிரத்து 44 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளதாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய விதிகள் ஒருபோதும் தடையாக இருக்காது என்றும், அதற்கு ஆட்சியாளர்களுக்கு நல்ல மனம் இருந்தால் மட்டுமே போதுமானது என்றும் கூறியுள்ளார். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் நபார்டு வங்கி மீது வீண் பழி போடுவதை விடுத்து, தகுந்த விதிகளைப் பின்பற்றி விவசாயிகளின் பயிர்க்கடன்களை உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



