முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!
திருப்பூர்:
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காகவும், குடும்பத்தினருக்குத் துக்கம் விசாரிப்பதற்காகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அங்கு வருகை தந்தார். அப்போது, துக்க வீட்டில் கூடியிருந்த அதிமுக தொண்டர் ஒருவர், திடீரென எஸ்.பி.வேலுமணியைப் பார்த்து “துரோகி” என்று சத்தமாக முழக்கமிட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
தொண்டரின் இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பொள்ளாச்சி ஜெயராமன், அந்தத் தொண்டரை உடனடியாகக் கண்டித்தார். தொடர்ந்து, அங்கிருந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சலசலப்பில் ஈடுபட்ட நபரை உடனடியாக துக்க வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினர். இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சொந்தக் கட்சித் தொண்டரே முன்னாள் அமைச்சரை நோக்கி இவ்வாறு கோஷமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




