காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!
காஞ்சிபுரம்:
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, புகழ்பெற்ற திருத்தேர் உற்சவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 7-ஆம் நாள் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, அதிகாலை முதலே வரதராஜ பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் பக்திப் பெருக்குடன் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, சுமார் 100 டன் எடையும், 76 அடி உயரமும், ஐந்து நிலைகளும் கொண்ட பிரம்மாண்ட திருத்தேரில், கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். இந்த ஆன்மீக வைபவத்தில் அமைச்சர்கள் ரமேஷ், ரஞ்சித் குமார், தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




