தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பெய்த கனமழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பழனி, அதன் சுற்றுப்புறக் கிராமங்கள் மற்றும் கொடைக்கானல் நகரின் முக்கியப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பிரம்மாண்டமாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள கொடைக்கானல் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மறுபுறம், சேலம் மாவட்டம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கடுமையான மழையின் காரணமாகச் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.




