“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!
சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் அதன் அசுர வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், “ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாடான ‘ஷாங்ரி-லா டயலாக்’ (Shangri-La Dialogue) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அதன் நவீனமயமாக்கல் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பீட் ஹெக்செத், இந்தியா மிக வலிமையான ஒரு நாடாக உருவெடுத்துள்ளது என்றும், தனது ஆயுதப் படைகளை (Armed Forces) அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அது தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தி, அப்பகுதியில் ராணுவ மற்றும் அரசியல் சமநிலையைப் பேணுவதில் இந்தியா ஒரு முதன்மையான காரணியாக (Key Factor) மாறியுள்ளது என்று அமெரிக்கா கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்துறை வளர்ச்சி: ராணுவ பலம் மட்டுமன்றி, மிகப்பெரிய தொழில்துறை மற்றும் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் பரிமாற்றக் கட்டமைப்பு (Logistics) திறனை இந்தியா மிக வேகமாக உருவாக்கி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் வேளையில், சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரே இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்டியிருப்பது, உலக அளவில் இந்தியாவின் ராணுவ முக்கியத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டியுள்ளது.





