பக்ரீத் பண்டிகை: அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை!
சென்னை:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற பொதுப் பகுதிகளில் மாடுகளை வெட்டுவதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பக்ரீத் பண்டிகைக் காலங்களில் துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போதனூர் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்பட உள்ளதாகவும், இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூர்யபிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளால் முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, மற்ற எந்தவொரு பொது இடங்களிலும் மாடுகள் வெட்டப்படக் கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்டது. மேலும், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் (DGP) தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கினை இத்துடன் முடித்து வைத்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பண்டிகைக் காலத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.




