கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: வழக்கறிஞர் வி.எஸ்.ஆறுமுகம் நேரில் ஆய்வு – சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!
கிள்ளியூர் (கன்னியாகுமரி): கன்யாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், உண்ணாமலைகடை அடுத்துள்ள முடியம்பாறை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பத்ரகாளியம்மன் சிலையைத் தாலுகா அலுவலகத்தில் கொண்டு சென்று சிறை வைத்துள்ள வருவாய்த்துறையினரின் நடவடிக்கை உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பரம்பரை பரம்பரையாகப் பக்தர்கள் வழிபட்டு வந்த கோயிலில், எவ்வித முன்னறிவிப்புமின்றி சாமி சிலையை அகற்றிய அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தச் சூழலில், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றம் மூலமாகச் சந்திக்க வேண்டிய சட்டப் போராட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஆறுமுகம் (Adv. V.S. Arumugam) சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார். முடியம்பாறை பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தைப் பார்வையிட்ட அவர், அங்கிருந்த நிர்வாகிகளிடமும் பக்தர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்தார். மேலும், தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை முறைப்படி மீட்டெடுக்கவும், ஆன்மீக உரிமைகளை நிலைநாட்டவும் தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தங்குதடையின்றி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இச்சம்பவம் காரணமாகக் கிள்ளியூர் மற்றும் உண்ணாமலைகடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.





