ரேஷன் வினியோகம் முற்றிலும் டிஜிட்டல்மயமாகிறது: ₹25,630 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
புதுடெல்லி:
நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் வினியோகத் திட்டத்தை முற்றிலும் ‘டிஜிட்டல்’ மயமாக்கும் அதிநவீன முறைக்கு, 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மாபெரும் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 16-வது நிதிக்குழுவின் பதவிக் காலத்திற்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக, மத்திய அரசின் பங்காக இந்த ₹25,630 கோடி நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரேஷன் பொருட்களுக்கான போக்குவரத்து, தளவாடங்கள் (Logistics) மற்றும் பொருட்களைக் கையாளுதல் ஆகியவை இனி முழுமையாக நவீனப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (Machine Learning), கணினி மொழி செயலாக்கம் (NLP) மற்றும் பிளாக்செயின் (Blockchain) போன்ற உலகத்தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொது விநியோகத் திட்டத்தை முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நவீனப்படுத்துவதே இந்த ‘சார்தக் பி.டி.எஸ்.’ (Sarthak PDS) திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று தெரிவித்தார். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ரேஷன் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்து, தகுதியான பயனாளிகளுக்குச் சரியான நேரத்தில் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.





