உதகையில் 128-வது மலர் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்: கண்டு ரசிக்கக் குவிந்த சுற்றுலா பயணிகள்!
உதகை:
நீலகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 128-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கண்களுக்குக் காட்சி விருந்தளிக்கும் இந்த மலர் திருவிழாவைக் கண்டு ரசிப்பதற்காக, அதிகாலை முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் பூங்காவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் முக்கிய அம்சமாக பூங்கா முழுவதும் சுமார் 50 ஆயிரம் பூந்தொட்டிகளில், 275 வகையான பல வண்ண மலர்கள் பிரம்மாண்ட மாடங்களில் அடுக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
கவர்ந்த மலர் வடிவங்கள்:
குறிப்பாக, மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடம், திருவள்ளுவர் சிலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், உதகை மலை ரயில் மற்றும் நீலகிரியின் பாரம்பரியமிக்க தோடர் பழங்குடியினர்களின் வீடு போன்ற மலர் உருவங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து, செல்ஃபி எடுக்கும் முக்கிய இடங்களாக மாறியுள்ளன.




