கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு: ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
திருவனந்தபுரம்:
நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சர் வி.டி.சதீசனுடன் சேர்த்து, மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட 20 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முன்னதாக, கேரள முதலமைச்சர் பதவிக்குக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்ட வி.டி.சதீசனை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முக்கியப் பிரமுகர்கள் வருகை:
இந்தத் தனித்துவமிக்கப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அளவிலான முக்கியப் தலைவர்கள் பலர் நேரில் கலந்துகொண்டு புதிய அரசுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.





