உதகை மலர் கண்காட்சி: “முறையான அழைப்பு இல்லை” – மாவட்ட ஆட்சியர் மீது பாஜக எம்எல்ஏ போஜராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!
உதகை:
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியுள்ள 128-வது மலர் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்க, மக்கள் பிரதிநிதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என உதகை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் குற்றம்சாட்டியுள்ளார். உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவிற்கு நேரில் சென்று மலர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்த சர்வதேச அளவிலான மலர் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ (MLAs) அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கோ (MP) முறையான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என அவர் சாடினார்.
ஆட்சியர் வராததற்கு கண்டனம்:
மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, இந்த முக்கியத்துவம் வாய்ந்த மலர் கண்காட்சியின் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பங்கேற்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் எம்எல்ஏ போஜராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




