உதயநிதி சொத்து விவரம்: வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021-ஆம் ஆண்டு வேட்புமனுவில் 11 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி, 2026-ஆம் ஆண்டு வேட்புமனுவில் 10 கோடி ரூபாய் மட்டுமே கடன் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வேட்புமனுவில் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த முரண்பாடுகள் குறித்து வருமான வரித்துறையும், கார்ப்பரேட் விவகாரத்துறையும் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தது.





