“வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் போதை நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் தற்போதைய சூழலில் வீட்டின் உள்ளே இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத அவலநிலை உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகார மட்டம் காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், “போதைப் பொருள் கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் எங்கு இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்குத் தெரியாதா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பு மேலும் சீர்குலையும் எனவும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.





