தருமபுரி: மயானத்திற்கு சாலை வசதி வேண்டி சடலத்துடன் சாலை மறியல் – பொதுமக்கள் போராட்டம்!
தருமபுரி: தருமபுரி அருகே மயானத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை எனக் கூறி, உயிரிழந்தவரின் சடலத்தைச் சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஓமநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மயானத்திற்குச் செல்ல முறையான பொது வழிப்பாதை இல்லாததால், கடந்த பல ஆண்டுகளாகவே உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யக் கொண்டு செல்வதில் கிராம மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யச் செல்லும்போது வழிப்பாதை இல்லாததைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஈச்சம்பட்டி – ஓமநத்தம் சாலையில் செல்வத்தின் சடலத்தை வைத்துப் போராட்டத்தில் குதித்தனர். “மயானத்திற்கு நிரந்தரச் சாலை வசதி செய்து தரப்படும் வரை சடலத்தை எடுக்க மாட்டோம்” என முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை வசதி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சடலத்தை எடுத்துச் சென்றனர். அடிப்படை வசதிக்காகச் சடலத்துடன் போராடிய இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.