மருத்துவமனையா? குப்பை மேலாண்மை மையமா? – தலையில் காயத்துடன் வந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால் விபத்தில் காயமடைந்தவருக்குத் தூய்மைப் பணியாளர் சிகிச்சை அளித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்புவனம் அருகே உள்ள பெத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர், தலையில் ஏற்பட்ட காயத்திற்காகச் சிகிச்சை பெறத் தனது நண்பர்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள், ஆறு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுநர் எனப் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பகல் நேரத்திலேயே மருத்துவமனையில் ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் கூட பணியில் இல்லாதது நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேறு வழியின்றி, அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் வரதராஜனின் தலைக் காயத்திற்குச் சிகிச்சை அளித்துள்ளார். இந்த அவல நிலையை வரதராஜனின் நண்பர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப்போக்கை வன்மையாகக் கண்டித்துள்ள பொதுமக்கள், பணி நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.