ஊட்டியில் பரபரப்பு: ஒரே வீட்டை காட்டி பலரிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு எடுத்துத் தருவதாகக் கூறி ஒரே வீட்டைப் பலரிடம் காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த இக்பால் கான் என்பவர், கடந்த ஆண்டு லீசுக்கு வீடு தேடியபோது, ஊட்டி நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஷாயின்ஷா என்பவர் இடைத்தரகர் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
தமக்குத் தெரிந்த வீடு ஒன்று லீசுக்கு இருப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டிய ஷாயின்ஷாவை நம்பி, இக்பால் கான் அவரிடம் ₹5 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், பணம் பெற்று பல மாதங்களாகியும் வீடு வாங்கித் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் ஷாயின்ஷா ஏமாற்றி வந்துள்ளார். இக்பால் கான் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், சுமார் ₹2.25 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்துவிட்டு, மீதமுள்ள தொகையைத் தராமல் இழுத்தடித்துள்ளார்.
இதற்கிடையே, ஷாயின்ஷா இதே பாணியில் ஒரே வீட்டைப் பலரிடம் காட்டி, லீசுக்கு எடுத்துத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது தொடர்பாக இக்பால் கான் ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஷாயின்ஷாவைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.