பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!
புதுடெல்லி:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதலாவது அரசுமுறைப் பயணமாகத் தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாலையில் டெல்லி சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் பல்வேறு முக்கிய நலன்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார். முதலமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதமரைச் சந்திப்பது என்ற அரசியல் மரபின்படி இந்தச் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப்பின் இரு தலைவர்களும் தற்போது மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இருவரது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரவி வருகின்றன. தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின் இறுதி நாளான இன்று, காங்கிரஸ் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள முதலமைச்சர் விஜய், இப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்றைய தினமே தமிழகம் திரும்பவுள்ளார்.





