தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது, மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் வாழ்வாதார மற்றும் கலாச்சார உரிமைகள் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலச் செப்பேடுகளை’ மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்காகப் பிரதமருக்கு முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து, மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், தமிழகத்தின் மாநில வாழ்த்துப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ கட்டாயம் பாடுவதற்கு ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரையினை (Clarification) வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த கோரிக்கையாக, ஏற்கனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ‘வான்வழி அமைப்பு மையத்தினை’ (Airborne Systems Centre) தமிழகத்திலேயே அமைக்குமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இறுதியாக, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு காவலில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்களையும், அவர்களது 266 படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை மத்திய வெளியுறவுத்துறை மூலம் வலியுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கோரிக்கை மனுவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.





