“தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி-யை அரசு தொடங்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை!
சென்னை:
தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக, தமிழ் சினிமாவுக்கு என்றே பிரத்யேகமாக அரசு சார்பில் தனி ஓடிடி (OTT) தளத்தை ஆரம்பிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் ‘சிலம்பம்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் (டிரைலர்) வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் அறிமுக நாயகன் அஜித், நாயகி மௌனிகா ரெட்டி மற்றும் பிரபல இயக்குநர்களான மோகன் ஜி, பேரரசு உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மோகன் ஜி, தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்துப் பேசினார். அப்போது, சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள் தங்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக, தமிழக அரசு சார்பில் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான ஓடிடி தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு அவர் மேடையின் வாயிலாகத் தனது கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கை தற்போது சினிமா வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






