“திமுக அரசின் நீட்சிதான் தவெக” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் அறிவிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், அதனை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் ‘இரு மாதத்திற்கு ஒருமுறை’ என நிபந்தனை விதிப்பது ஏமாற்று வேலை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வாரி வீசிவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவற்றைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் அதே பாணியைத் தான் தமிழக வெற்றிக் கழகமும் பின்பற்றுகிறது. அந்த வகையில் திமுக அரசின் நீட்சிதான் தவெக” என டிடிவி தினகரன் மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கும் இத்தகைய போக்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




