திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு காரணமாக, 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஆழந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை” – நயினார் இரங்கல்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் அத்தனை பேரும் முழு உடல் நலத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அசம்பாவிதங்கள் தொடர்வது அச்சமளிக்கிறது” – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை
தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மையமாகக் கொண்டு இயங்கும் நமது தமிழகத்தில், கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அடுத்தடுத்த அசம்பாவிதங்கள் தொடர்வதும், அதனால் விலைமதிப்பற்ற உயிர்பலிகள் உண்டாவதும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிரைக் காக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும், ஆலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதையும், அங்கே எதிர்பாரா விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அதைக் கையாள்வதற்கான அவசரக்கால தொழில்நுட்பங்கள் உள்ளனவா என்பதையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய்யை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.






