PF குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 ஆக உயர்வு? மத்திய அரசு தீவிர ஆலோசனை!
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 7,500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கையின் பின்னணி:
தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை வெறும் 1,000 ரூபாயாக மட்டுமே உள்ளது. இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலில், இந்தத் தொகை அடிப்படை வாழ்வாதாரத்திற்கு எதற்கும் போதுமானதாக இல்லை எனப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, ஓய்வூதியத்தை ரூ. 7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்களும், ஓய்வூதியர் அமைப்புகளும் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
விரைவில் அதிரடி முடிவு:
இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு, தற்போது ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த முன்மொழிவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டவுடன், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.






