நீட் மறுதேர்வு: வரும் ஜூன் 22 வரை இந்தியாவில் ‘டெலிகிராம்’ செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை!
தேசிய அளவில் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாகத் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தத் தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த அவசரத் தலையீட்டின் கீழ் இரண்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
- முதலாவதாக, நீட் மறுதேர்வு முடியும் வரை, அதாவது ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதற்கான பொதுமக்களின் அணுகல் (Access) முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- இரண்டாவதாக, இந்தியாவில் பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளைத் திருத்தம் செய்யும் ‘எடிட்’ (Edit Message) வசதியை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்று டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு தொடர்பான ரகசியத் தன்மையைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவானது, லட்சக்கணக்கான மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி, முற்றிலும் பாதுகாப்பான மற்றும் நேர்மையான சூழலில் தேர்வு எழுதப் பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தேசிய தேர்வு முகமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.





