டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு!
தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களைக் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. கூட்டுச் சதி மற்றும் டெண்டர் விதிமீறல்கள் காரணமாக இந்த முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, இது குறித்து சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ‘அறப்போர் இயக்கம்’ சார்பிலும், சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பிலும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணியளவில் நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்குகிறது. இந்தத் தீர்ப்பு மின்சாரத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.





