மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது – 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்!
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில், கடந்த 23-ஆம் தேதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்த இறுதிக்கட்டத் தேர்தலுக்காக 142 தொகுதிகளிலும் சுமார் 41,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத் தேர்தலின் போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதைக் கருத்தில் கொண்டு, இன்று பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 27,300 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.





