நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!
நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராதாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிகள் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் கண்டிப்பாகச் சிறை செல்வார்கள் என அவர் உறுதிபடக் கூறினார்.
பாஜக வேட்பாளர் சி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ரோடு ஷோ நடத்திய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். தமிழகத்தின் நிதி நிலைமையை திமுக சீர்குலைத்துவிட்டதாக விமர்சித்த அவர், கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காகத் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் எனக் கூறி, மாற்றத்தை ஏற்படுத்த தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.




