ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?
வாஷிங்டன் / தெஹ்ரான்:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள அதிரடி முற்றுகை ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 40 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பைச் சந்தித்து வரும் ஈரான், வேறு வழியின்றி அமெரிக்காவிடம் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
முடங்கிய பொருளாதாரம் – அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள்:
கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போரினால், ஈரானின் பொருளாதாரத்திற்கு சுமார் 270 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- தனிநபர் இழப்பு: ஈரானின் 9.2 கோடி மக்களில், ஒரு நபருக்குச் சராசரியாக 1,600 முதல் 3,250 டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
- பணவீக்கம் மற்றும் வீழ்ச்சி: ஈரானிய ரியாலின் மதிப்பு ஏற்கனவே சரிந்துள்ள நிலையில், தற்போது பணவீக்கம் 180 சதவீதத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 10 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது.
பெட்ரோ கெமிக்கல் மற்றும் எரிசக்தித் துறை அழிவு:
ஈரானின் வருவாய்க்கு ஆதாரமாக விளங்கிய பெட்ரோ கெமிக்கல் துறையின் ஏற்றுமதி திறன் 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஹ்ஷஹர் மற்றும் தெற்கு பார்ஸ் மையங்கள் மீதான தாக்குதல்களால் 50 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் மட்டும் 25 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி: ஈரானின் துருப்புச்சீட்டு அவருக்கே வினையானது!
உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து உலக நாடுகளை மிரட்ட ஈரான் திட்டமிட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவின் அதிரடி முற்றுகை அந்தத் திட்டத்தைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
- அமெரிக்காவின் முற்றுகை: 12 போர்க்கப்பல்கள் மற்றும் 10,000 வீரர்களுடன் ஓமன் வளைகுடாவை அமெரிக்கா சுற்றி வளைத்துள்ளது.
- வருவாய் இழப்பு: ஈரானுக்குக் கட்டணம் செலுத்திச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்துவதால், நாளொன்றுக்கு 435 மில்லியன் டாலர் இழப்பு ஈரானுக்கு ஏற்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு நாளைக்கு நான்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டெழ 10 ஆண்டுகள் ஆகுமா?
ஈரானின் எண்ணெய் சேமிப்புத் திறன் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப 600 பில்லியன் டாலர் செலவாகும் என்றும், பொருளாதாரத்தைச் சீரமைக்கக் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு உடன்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஈரான் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.





