மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!
சென்னை:
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை எவ்வித அரசியல் சாயமும் பூசாமல் தமிழகத்தில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “இந்தியாவின் மிக நீண்ட காலப் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி செய்து கொண்டிருப்பதும், ஜவஹர்லால் நேருவின் நீண்டகால ஆட்சி சாதனையை அவர் முறியடித்திருப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு அவர் உருவாக்கிய மக்கள் நலத் திட்டங்களே அடித்தளமாக விளங்குகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கூட்டுறவுத் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மத்திய அரசின் ‘ஜல்ஜீவன் மிஷின் 2.0’ (Jal Jeevan Mission 2.0) திட்டத்தை வரும் 2028ஆம் ஆண்டு வரை நீட்டித்து, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2,177.77 கோடி நிதி கிடைக்கவுள்ளதுடன், ஏற்கனவே 1.86 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தவெக அரசு முந்தைய திமுக அரசைப் போல மொழி, இனம், அரசியல் காரணங்களைக் கூறிப் பிரிவினைவாதம் செய்யாமல், சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து மகத்தான திட்டங்களையும் தமிழக மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.





