அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி: எடப்பாடி பழனிசாமி அதிரடி வாக்குறுதி!
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பொதுமக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், எவ்வளவு செலவானாலும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குத் தரமான அரிசி விநியோகம் செய்யப்படும் என்றும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், அம்மா உணவகங்கள் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்குத் தரமான மற்றும் ருசியான உணவு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




