இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!
ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதி, தற்போது இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணைகள், நிலம், நீர் மற்றும் வான் என மூன்று தளங்களில் இருந்தும் ஏவப்படும் திறன் கொண்டவை. ஒரே சமயத்தில் பல இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த இந்த அதிநவீன ஏவுகணைகளை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ராணுவத்திடம் ஒப்படைத்தார். இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிப்பதோடு, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.






